ஜெர்மானிய படையெடுப்பு

Raghu
3 min readAug 5, 2022

ரஷ்யா உக்ரைன் விவகாரம் இன்னும் முடியவில்லை, அதற்குள் ஜெர்மனி வேறயா ?
மேற்கொண்டு படியுங்கள் புரியும். 😉

ஏப்ரல் 1, 1972 = 5 ஜெர்மானிய தளபதிகள் ஒரு தீர்மானம் எடுக்கிறார்கள் — உலகின் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பது என்று.

முதலில் ஐரோப்பாவை வளைத்த பிறகு, அமெரிக்கா, ஆசியா, ஆப்ரிக்கா என அனைத்து கண்டங்களையும் ஆக்ரமிக்கிறார்கள்.

ஏழை, பணக்கார பாகுபாடு பார்க்காமல், சிறிய பெரிய என்ற தயவு தாட்சண்யம் இல்லாமல் அனைத்தையும் கைப்பற்றுகின்றார்கள்.

சர்வாதிகாரி ஹிட்லரின் கனவே கை கூடாத போது இவர்களின் தீர்மானம் கை கூடி இருப்பது பற்றி தான் இந்த பதிவு.

இவர்களின் படையெடுப்பின் தாக்கம் பற்றி ஒரு உதாரணம்.
சிறிய நாடான சிங்கப்பூரை எடுத்துக் கொள்ளுவோம்.
இந்நாட்டில் இவர்களது படையெடுப்பு, ஊடுரூவலின் தாக்கம் பற்றி பார்ப்போம்.

சிங்கப்பூர் ஏர்லின்ஸ் (Singapore Airlines) விமானம் மூலம் இங்கு வருகிறீர்கள்.
SIA இவர்கள் பிடியில்.

விமானம் Changi Airportல் இறங்குகிறது.
Changi Airport Group இந்த ஜெர்மானியர்களின் பிடியில்.

குடியேற்றம் (Immigration) முடிந்தவுடன் நீங்கள் டாக்ஸியோ, ட்ரெயினோ பிடிக்கிறீர்கள்.
ரயில் கட்டுமானம், சாலை கட்டுமானம் (Land Transport Authority) இவர்கள் வசம்.

ஹோட்டலில் செக் இன் செய்து தெருவில் இறங்கி கடைக்குள் (Cold Storage / NTUC Fairprice) நுழைந்து தினசரி, ஜூஸ் வாங்குகிறீர்கள்.
இக்கடைகளும் ஜெர்மானிய படையெடுப்பின் தாக்கத்திற்கு உள்ளானவர்கள்.

இக்கடைகளில் வாங்கும் பொருட்களின் மீது GST வசூலிக்கப்படுகிறது.
GST வசூலை மேற்பார்வை செய்வது IRAS (Inland Revenue Authority Singapore).
இந்த IRAS வருவது Ministry of Finance கீழ்.
IRAS, MOF ஆகியவையும் ஜெர்மானிய வலைக்குள் விழுந்தவர்கள்.

இந்தியாவிலும் இதே நிலை தான்.
L & T, Reliance, M & M, Tata Motors, ONGC, Dr Reddy, பல, பல நூற்றுக்கணக்கான SMEs.

இவ்வாறு பல நாடுகளில் பற்பல நிறுவனங்களில் இவர்கள் ஆக்ரமித்ததையே நான் ஜெர்மானிய படையெடுப்பு என்கிறேன். 😉

யார் இவர்கள் ?
இவர்களின் ஆக்கிரமிப்பு தான் என்ன ?

Systems, Applications, and Products in Data Processing என்கிற கம்பெனி தான்
SAP AG.

Dietmar Hopp
Hans-Werner Hector
Hasso Plattner
Klaus Tschira
Claus Wellenreuther

மேற்சொன்ன 5 தளபதிகளால் April 1, 1972ல் SAP ஆரம்பிக்கப்பட்டது.
இப்போது இவர்களின் நிறுவனத்திற்கு வயது 50.
இத்தளபதிகளின் வயது தற்போது 80களில்.

இவர்களின் வீர தீர சாகசங்களை, பல நாடுகளின் மீதான ஆக்கிரமிப்பின் விஸ்தீரணத்தை இப்படத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்.

மூலப் பொருட்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும், அதை விற்றவர்களின் கணக்கில் வரவு வைத்து நேரத்திற்கு அவர்களின் பாக்கியை நேர் செய்வதற்கும் உருவான SAP R / 1 இப்போது பிரமாண்டமாக வளர்ந்து இருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் சகல விதமான துறைகளின் நிர்வாகத்திற்கும் இந்த மென்பொருள் கை கொடுக்கிறது.

இந்த மென்பொருள் பன்னாட்டு நிறுவனங்கள், பல நாடுகளின் பல்வேறு சட்ட திட்டங்களுக்கு, வரி விதிப்புகளுக்கு, GAAP, Taxation ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.

SAP R / 1 என்று ஆரம்பித்த இவர்களின் மென்பொருள் பல உருமாற்றம் நிகழ்ந்து தற்போது S/4 HANA என உலகை ஆக்ரமித்திருக்கிறது.

உலகின் பெரிய மென்பொருள் நிறுவனமானாலும் இவர்களைப் பற்றி Google, Microsoft, Amazon போன்று பரவலாக அறியப்படாமலேயே இருக்கிறது.
ஆனால் இந்த மென்பொருள் பயனாளிகளான நிறுவனங்களுக்கு மட்டுமே தெரியும்,
“ அவனன்றி (SAP) ஒரு அணுவும் அசையாது” என்பது.

இந்த SAP என்ற பதத்திற்கு ஹாஸ்யமாக பல விரிவாக்கங்கள் கூறப்பட்டு வருகின்றன.
👉 SAP = Start of All Problems.

👉 SAP = Singapore America Plan.
அதாவது இந்த மென்பொருளை படித்தால் முதலில் சிங்கப்பூரில் ஒரு வேலையைப் பிடித்து அங்கிருந்து America செல்வது எளிது.

👉 SAP = Software of Andhra Pradesh.
இதில் பல தெலுங்கர்கள் வேலை செய்வதால்.
1999–2000 காலகட்டங்களில் ஹைதராபாத்திலிருந்து விமானம் விமானமாக அமெரிக்கா போனவர் கணக்கிலடங்கார்.

👉 SAP = Suitcase and Passport.
இன்றும் SAPல் திறம் பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டுவதால்.

👉 நல்ல விதமாக கூறுவதென்றால்
SAP = Solves All Problems
SAP = Salary Advancement Program

SAP கம்பெனியின் உண்மையான ஜெர்மன் பெயர் -
Systeme, Anwendungen und Produkte in der Datenverarbeitung.

இதெல்லாம் உலகத்தவருக்கு வாயில் நுழையாது என்று சுருக்குமாக SAP.

ஆனால் இதை படித்தவர்கள், இதில் வேலை பார்ப்பவர்கள் SAP என்று சேர்த்து சொல்ல மாட்டார்கள்.
S A P என்று பிரித்தே சொல்வார்கள்.
நானும் அவ்வாறே சொல்வேன்.😉

Credits:- SAP, www.

--

--

Raghu

பகிர்தல் பல்கிப் பெருக்குமே