Raghu
2 min readOct 22, 2022

--

சென்னையில் ஒரு மழைக்காலம்

சென்னைக்கும் தண்ணீருக்கும் ஏழாம் பொருத்தம்.

10 மாதங்கள் “தண்ணீர்” கஷ்டம்.
2 மாதங்களுக்கு “தண்ணீரால”் கஷ்டம்.

இப்படி, எப்படி ?

10 மாதங்கள் தண்ணீர் பற்றாக்குறை:-
வாட்டர் கேன் தண்ணீரில் குளிப்பது, வாட்டர் லாரியை துரத்துவது, போர் இறக்குவது, குழாயை திறக்காமலேயே பல அன்றாட வேலைகளை செய்து கொள்வது, வானத்தைப் பார்த்து மழை வேண்டி பிரார்த்தனை செய்வது … இப்படி.இப்படி..

2 மாதங்கள் — மழைக்காலங்கள்:-
ஓடும் தண்ணீரை நிறுத்துவது, வெளியேற்றுவது, மழையைத் திட்டுவது / சபிப்பது, எப்போது புயல் ஓயும், வானம் எப்போது வெளுக்கும் என்று காத்துக் கிடப்பது …
எப்படி … எப்படி…

சில மழைக்காலங்களில் என்னுடைய அனுபவங்கள்

நான் படித்த பள்ளி ஒரு கிலோமீட்டர் தூரம் தான். |
தண்ணீர் தேங்களுக்கு புகழ் பெற்ற தி நகர் — வாணி மஹால் அருகில் பசுல்லா ரோடில். அப்போதும், இப்போதும் இந்த ஏரியா பற்றி பெருமையாக — நாலு நாய்கள் சேர்ந்தார் போல் சிறுநீர் கழித்தால் போதும் வெள்ளம் ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுவிடும்.
அவ்வளவு பெருமை வாய்ந்த இடம்.

மழைக்காலங்களில் எங்கள் பள்ளி மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடமாக மாறிவிடும்.
இவர்கள் அருகிலிருக்கும் குடிசை வாழ் ஏழை மக்கள்.
அப்போது பள்ளி நிர்வாகம் எங்களை (மாணவர்களை) நிவாரண பொருட்கள் ஏற்பட செய்ய முடுக்கி விடும்.

நாங்கள் வீடு வீடாக சென்று பழைய துணி மணிகள், போர்வை, குடை, பிரட், இருமல், ஜுர மருந்து மாத்திரைகள் சேகரித்து வழங்குவோம்.
இப்படி செல்வது அனேகமாக இடுப்பளவு தண்ணீரில்.

எங்கள் ஹவாய் செருப்புகள் காலில் நிற்காமல் பறந்து — சாரி — நீந்திச் சென்று விடும்.
அதை நீந்த விடுவதும், பிடிப்பதும் அவ்வயதில் ஒரு மழைக்கால சுவாரசியம்.

கல்லூரிக்காலத்தில் பல பஸ் மாறி, இதே போல் நீந்தி வீடு வருவது.

CA காலங்களில் பரீட்ஷைகள் கோடை நடுவிலும் மழைக்கால நடுவிலும் தான். May — Nov.
நவம்பர் மழைக்காலத்தில் நேரத்திற்கு பரீட்ஷைக்கு செல்வது, பரீட்ஷை முடிந்து சீக்கிரம் வீடு வந்து சேர்ந்து அடுத்த நாள் பரீட்ஷைக்கு தயார் செய்வது எல்லாமே டென்ஷன் மிகுந்ததாக இருக்கும்.
இன்றைய பரீட்ஷையில் விட்டதை நினைத்து கவலைப்படவோ,
நாளைய பரீட்ஷையை நினைத்து நேரத்தை திட்டமிடுவதற்கோ செலவு செய்யாமல் மழை, வெள்ளம் பற்றிய யோசனையே பெரிதாக இருக்கும்.

அப்படியும் நானும் என் நண்பர்கள் பலரும் நவம்பர் பரீட்ஷைகளிலே தான் பாஸ் செய்தோம்.

வேலை செய்ய ஆரம்பித்து போது கூடுதல் கவலை ஸ்கூட்டரைப் பற்றி.
வெள்ளத்திலும் ஓட்டினால் தான் வீடு வந்து சேர முடியும்.
தண்ணீர் புகாமல் ஓட்ட வேண்டும்.
அப்படியும் கொஞ்சமேனும் தண்ணீர் என்ஜினில் புகுந்து விடும்.
பின்னர் ஸ்கூட்டரை சாய்த்து, சாய்த்து — உதைத்து, உதைத்து மீண்டும் கிளப்பி வீடு வந்து சேர போதும் போதும் என்றாகிவிடும்.

சில நாட்களில் எங்கேயும் ஒதுக்குப்புறமாக ஜெமினி பாலத்தின் அடியில் ஸ்கூட்டரை நிறுத்தி பூட்டி விட்டு நடந்து வந்து சேர்ந்ததும் உண்டு.

ஒரு முறை எல்லாம் சரியாக இருந்தாலும் வெகு நேரம் கழித்து அலுவகத்திலிருந்து கடைசியாக கிளம்ப, வேறு எவரும் இல்லாமல் என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டிலிருந்து பூட்டு கொண்டு வரச் சொல்லி பூட்டி வீடு சென்றேன்.

மற்றவர் வந்து பூட்டிய கதவுகளுக்கு முன் நிற்காமல் இருக்க விடிகாலையில் வந்துஅலுவலகத்தை திறந்து உட்கார்ந்தது எனக்கு மட்டுமல்ல என் குடும்பத்தாருக்குமே
ஒரு மழைக்கால அனுபவம்.

சென்னை அனுபவங்கள் பல வருடங்களாய் என்றாலும் பம்பாய் மழைக்கால அனுபவமும் கொஞ்சம் உண்டு.

மழைக்கால வாழ்க்கைத் தத்துவம் :-
மழை வராவிட்டால் “சனியனே” என்று திட்டுவது,
மழை கொட்டினால் “சளியே” என்று கவலைப்படுவது.

Image credits:- www.

--

--

Raghu

பகிர்தல் பல்கிப் பெருக்குமே